ரயில் மறியல் துவங்கியது : நூற்றுக்கணக்கானோர் கைது

Webdunia

சனி, 25 ஆகஸ்ட் 2007 (10:45 IST)
சேலம் ரயில் கோட்டம் திட்டமிட்டபடி அமைக்கப்படுவதை உறுதி செய்யக் கோரி இன்று காலை முதல் கோவை, போத்தனூர், திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் மறியலில் ஈடுபட்ட பல நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை 4 மணிக்கு டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற விரைவு ரயில் திருப்பூர் அருகே போராட்டக்காரர்களால் நிறுத்தப்பட்டது. ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தும் ரயில் மறியலில் பல நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டு ரயிலை மறித்தனர்.

நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதேப்போல போத்தனூரிலும் பாமக, பெரியார் திராவிடக் கழகம், திமுக கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கேரளாவில் இருந்து வந்த ரயிலை மறித்தனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே அறிவித்தபடி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் சேலத்தில் ரயில் மறியலில் திமுகவினர் ஈடுபட்டனர். அவர்களோடு பாமக, திராவிடர் கழக தொண்டர்களும் ரயில் மறியல் செய்தனர்.

தன்பாத்தில் இருந்து ஆலப்புழைக்குச் செல்லும் ரயிலை அவர்கள் மறிக்க திட்டமிட்டுள்ளனர்.

சேலத்தில் இருந்து கோவை வரை ரயில் மறியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையிலும் சென்னையில் இருந்து கேரளத்திற்கு புறப்பட வேண்டிய ரயில்கள் நிலைமைக்கு ஏற்றவாறு இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்