தனியார் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அரசு உறுதி செய்யும்: பொன்முடி

Webdunia

வெள்ளி, 24 ஆகஸ்ட் 2007 (10:52 IST)
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்விகளுக்கு அரசி நிர்ணயித்த கட்டணத்தையே சுயநிதி கல்லூரிகள் வசூலிப்பதை அரசு நிச்சயம் உறுதி செய்யும் என்று கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, சுயநிதி கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி வேறு ஏதாவது கட்டணங்கள் வசூலிப்பதை தடுக்க அதிரடி சோதனை நடத்தப்படும் என்று கூறினார்.

சுயநிதி கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் தொடர்பாக முதல் முறையாக இப்பொழுதுதான் இப்படிப்பட்ட சோதனைகள் நடைபெறுவதாகவும் இதன் காரணமாக அக்கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட 90 விழுக்காடு மாணவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தையே செலுத்தி சேர்ந்துள்ளதாக பொன்முடி கூறினார்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட மாணவர்களிடம் அதிக கட்டணங்க்ளை வசூலித்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி பேரமைப்பிற்கு அரசு கடிதம் எழுதியுள்ளதா என்று கேட்டதற்கு, கட்டண விதிகளை மீறிய சுயநிதி கல்லூரிகளுக்கு எதிரான ஆதாரங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் விரைவில் அரசு கடிதம் எழுதும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை 42,200 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், இன்னமும் 25,000 இடங்கள் காலியாகவே உள்ளன என்றும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்