24ம் தேதி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்-ஜெ

Webdunia

சனி, 18 ஆகஸ்ட் 2007 (11:11 IST)
நிலங்களின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியதை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் 24-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை தி.மு.க. அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது மட்டும் அல்லாமல், கோவில், வக்பு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஆகியவற்றின் நிலங்களை பதிவு செய்ய வரும் போது சம்பந்தப்பட்ட துறையில் இருந்து `ஆட்சேபனை இல்லை' என்ற சான்று பெற்ற பிறகு தான் பதிவு செய்கிற நிலை இருந்து வந்தது. ஆனால் 25.7.2007 முதல் சம்பந்தப்பட்ட துறையில் இருந்து `ஆட்சேபனை இல்லை' என்ற சான்றிதழை பெறாமலேயே பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆணையிட்டுள்ளது.

ஆகவே தி.மு.க. அரசு தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ள பல மடங்கு உயர்த்தப்பட்ட வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயத்தை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ளவும், `ஆட்சேபனை இல்லை' என்ற சான்றிதழ் பெற்ற பின்னரே பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும்; அ.தி.மு.க. சார்பில் வருகிற 24ஆம் தேதி காலை 11 மணி அளவில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்