தென்காசியில் பயங்கர மோதல் : 6 பேர் வெட்டிக் கொலை!

Webdunia

செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (17:55 IST)
தென்காசியில் சில ஆண்டுகளாக இருந்துவரும் மத ரீதியான மோதலைத் தொடர்ந்து இன்று நடந்த வன்முறையில் 6 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்!

நெல்லை மாவட்டம் தென்காசி நகர இந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவரை வெட்டிக் கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குமார் பாண்டியனின் தம்பி செந்தில், அவரது நண்பர் நடராஜன் ஆகியோர் வெட்டப்பட்டனர். இதனையடுத்து முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த மைதீன் சேட் கான் என்பவர் வெட்டப்பட்டார்.

மைதீன் சேட் கான் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சேகர் உள்ளிட்டோர் இன்று காலை தென்காசி நீதிமன்றத்திற்கு வந்தனர். அவர்களை 2 மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் வழிமறித்து தாக்கினர். இருதரப்பினரும் கத்தி, அரிவாளுடன் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், அதில் அசன் கனி (வயது 35), ரவி, சேகர் (குமார் பாண்டியனின் தம்பி) ஆகிய மூவரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த நசீர் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். செந்தில், நாகூர் மீரான் ஆகிய இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த சையது அலி, அப்துல்லா, அபு, ராஜா, மீரான் ஆகியோர், பாளையங்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து தென்காசியில் கடைகள் அடைக்கப்பட்டு பதற்றம் நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்