பொதுத்துறை நிறுவனம் மூலமாக கேபிள் டி.வி. இணைப்பு வழங்குவது தொடர்பாக உரிய உரிமம் கோரி மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கேபிள் டி.வி. இணைப்பு தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி இன்று சென்னை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விரைவில் தமிழக அரசின் சார்பில் அரசு பொதுத்துறை நிறுவனம் மூலமாக கேபிள் டி.வி. இணைப்பு வழங்குவதை மேற்கொள்ளலாம் என்றும், இதற்காக உரிய உரிமம் கோரி மத்திய அரசுக்கு உடனடியாக விண்ணப்பிக்க போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்தப் பணிகளை மேற்கொள்வது குறித்து 11ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவையில் விவாதித்து முடிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டதாக அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர், உள்துறை செயலாளர், எரிசக்தித் துறை செயலாளர், தகவல் தொழில் நுட்பத் துறை செயலாளர், மின்வாரியத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.