கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2,300 கோடி செலவில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பெங்களூருவைச் சேர்ந்த ஜி.எம்.ஆர். நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் தமிழக தொழில்துறை வளர்ச்சிக் கழக தலைவர் ராமசுந்தரம், ஜி,எம்.ஆர் நிறுவனத்தின் இயக்குனர் நாகேஷ்வர ராவ் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நாகேஷ்வர ராவ், சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்கள் வளர்ச்சி அடையும் என்றும், குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் பொருளாதார வளர்ச்சி அடையும் என்றும் கூறினார்.
இத்திட்டத்திற்காக 1,330 ஏக்கர் வறண்ட நிலம் கையகப்படுத்த உள்ளதாகவும், இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் மின்னனு தொழில் நுட்ப பொருட்கள், ஆடை வடிவமைப்புகள் தயாரிக்கப்படும் என்றார்.
ஆண்டிற்கு ரூ.16,000 கோடி வரை பொருட்கள் ஏற்மதி செய்யப்படும் என்று குறிப்பிட்ட ராவ், இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம் மறைமுகமாகவும், நேரிடையாகவும் 3,00,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.