கோவை தொடர் குண்டு வெடிப்பு : குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விவரம்

Webdunia

திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (09:32 IST)
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 153 பேருக்கான தண்டனை விவரம் இன்று முதல் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, கோவை நகரம் முழுவதும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தடை செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, முகமது அன்சாரி, கேரளா மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 167 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பை, கடந்த ஒன்றாம் தேதி கோவை தனி நீதிமன்ற நீதிபதி உத்ராபதி அறிவித்தார்.

அப்துல் நாசர் மதானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. அல்- உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ. பாஷா, முகமது அன்சாரி உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிபதி உத்ராபதி தனது தீர்ப்பில் அறிவித்தார்.

இந்நிலையில, குற்றம் சாட்டப்பட்டவர்களில் மேலும் ஐந்து பேருக்கான தீர்ப்பையும், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 153 பேருக்கான தண்டனை குறித்த தீர்ப்பையும் இன்று முதல் நீதிபதி உத்ராபதி அறிவிக்க உள்ளார்.

இதனிடையே, 83 பேர் மீதான கூட்டுச் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. எனவே, இந்த 83 பேரும், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களும் இன்று விசாரணைக்கு வருகிறது.

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று தண்டனை வழங்கப்படுவதையொட்டி, கோவை நகரம் முழுவதும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்