ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வோம் : பழ. நெடுமாறன்!

Webdunia

ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2007 (20:37 IST)
ஈழத் தமிழர்களுக்காக நன்கொடை மூலம் பெறப்பட்ட உணவுப் பொருட்களை அங்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி தராததால் தாங்களே படகுகளின் மூலம் நேரடியாக அனுப்பி வைப்போம் என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்!

சிறிலங்க அரசு யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையை அடைத்ததால் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கு உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக ரூ.1 கோடி மதிப்பிலான உணவுப் பொருட்களை நன்கொடையாக சேகரித்துள்ள தமிழர் தேசியத் தலைவர் பழ. நெடுமாறன், அவற்றை ஈழத் தமழர்களுக்கு கொண்டு செல்ல சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அனுமதி அளித்தும் மத்திய அரசு அனுமதி அளிக்காததைக் கண்டித்துள்ளார்.

"இப்பொருட்களைச் சேகரித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. அவைகள் கெட்டுப் போகும் சூழ்நிலையும் உள்ளது. எனவே அவற்றை ஈழத் தமிழர்களுக்கு படகுகள் மூலம் நேரடியாக அனுப்பி வைக்கப்படும்" என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் 12 ஆம் தேதி நாகப்பட்டினத்தில் இருந்தும், ராமேஸ்வரத்தில் இருந்தும் அப்பொருட்கள் படகுகளின் மூலம் ஈழத் தமிழர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் நெடுமாறன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்