33 பொறியியல் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூல் : அரசு அறிவிப்பு

Webdunia

வியாழன், 2 ஆகஸ்ட் 2007 (20:43 IST)
தமிழகத்தில் 33 பொறியியல் கல்லூரிகள் அதிக அளவில் கட்டணம் வசூலித்திருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்திருப்பதாக தமிழக உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகள் மீதான புகார் நிருபிக்கப்பட்டால் அவற்றின் அங்கிகாராத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர் கல்வித் துறை அதிகாரி கணேசன், உயர் கல்வித் துறையின் சார்பில் 70 குழுக்கள் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதாக கூறினார்.

இக்குழுக்கள் மேற்கொண்ட முதல் ஆய்வில் சென்னையில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, நடிகர் விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 33 பொறியியல் கல்லூரிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்திருப்பதாக கூறினார்.

இந்த கல்லூரிகள் மீதான புகார் நிருபிக்கப்பட்டால், அவற்றின் அங்கிகாரத்தை ரத்து செய்யக் கோரி அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலிங்கை வலியுறுத்தப்படும் என்றார். தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க, அடுத்த ஆண்டு முதல் கலந்தாய்வின் போதே கட்டணம் வசூலிக்கப்பட்டு கல்லூரிகளில் சேர்க்கப்படும் என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்