ரயில் மறியலில் ஈடுபட்டால் நடவடிக்கை - வேலு எச்சரிக்கை

Webdunia

வியாழன், 2 ஆகஸ்ட் 2007 (19:47 IST)
ரயில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே 2 ரெயில்கள் தடம் புரண்ட பகுதியை ரயில்வே இணை அமைச்சர் வேலு இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில்கள் தடம் புரள காரணமாக இருந்த பாயிண்ட் கிராஸ் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த மாதம் முதல் ரயில் கால அட்டவணை மாற்றப்பட்டிருப்பதாகவும், பொது மக்களுக்கு கூடுதலாக ரயில் விடுவதற்காகத்தான் அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ரயில் செல்லாத பகுதிக்கு நீட்டிப்பு செய்து அப்பகுதி மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காகத்தான் சில ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலு குறிப்பிட்டார்.

பொது மக்கள் ரயில் நேரம் மாற்றம் குறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் உரிமை உண்டு என்று குறிப்பிட்ட அவர், ஆனால் தண்ட வாளத்தில் அமர்ந்து மறியல் செய்வது முறையல்ல என்றார்.

இதனால் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்யபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், கால தாமதத்திற்கு பயணிகளே காரணமாக இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ரயில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அப்போது எச்சரிக்கை விடுத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்