தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தான் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நீதிபதி ராமன் விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது.
தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் ஓராண்டு கல்விக் கட்டணமாக ரூ.1,30,000 மட்டுமே வசூலிக்க வேண்டும் என அரசு நிர்ணயம் செய்தது. இதனை ஏற்க மறுத்து தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, தனியார் கல்லூரிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நீதிபதி ராமன் ஆணையத்தின் பரிந்துரைக்கு இடைக்கால தடை விதித்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு, இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் தலைமையிலான அமர்வு இன்று வழங்கியது.
அதில், தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என்றும், கட்டணம் குறித்து ராமன் கமிட்டி பரிந்துரைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியும் உத்தரவிட்டனர்.
செட்டிநாடு மருத்துவக் கல்லூரி ரூ.3,00,000, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி ரூ.2,25,000, ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி ரூ.2,30,000 வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்.