அரசு நிர்ணயித்த ஆண்டுக் கட்டணத்திற்கும் அதிகமாக வசூலிக்கும் சுயநிதி மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் ஆண்டுக் கட்டணமாக ரூ.1,30,000 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று 2004 ஆம் ஆண்டு நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டது. ஆனால் செட்டிநாடு மருத்துவக் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட சில தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அதிகம் கட்டணம் வசூலிப்பதாகவும், இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இக்கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.