தமிழக கூட்டுறவு வீட்டு வசதி இணைய பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணைய பணியாளர்களுக்கு பல ஆண்டுகளாக பதவி உயர்வு நிறுத்தி வைக்கப் பட்டிருந்ததாகவும். இதனால், சில பணியாளர்கள் தகுதியிருந்தும், பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிடுமாறு தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணைய தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர் என்றும், இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணைய பணியாளர்களுக்கு தகுதிகளுக்குட்பட்டு பதவி உயர்வு வழங்கிடுவதற்கு அமைச்சர் சுப. தங்கவேலன் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதவி உயர்வு பெறும் பணியாளர்கள் அனைவரும் கடன் வசூல் பணிகளில் முழுக்கவனம் செலுத்திட வேண்டும் என்றும், கடன் தொகையை வசூல் செய்து, தகுந்த பயனாளிகளுக்கு புதிய கடன்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுப. தங்கவேலன் அறிவுறுத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.