மதானிக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை - தீர்ப்பு!

Webdunia

புதன், 1 ஆகஸ்ட் 2007 (14:33 IST)
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 14வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கேரளத்தின் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானிக்கு எதிரான குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

அப்துல் நாசர் மதானிக்கு எதிராக அரசு தரப்பு சாற்றிய 5 குற்றச்சாற்றுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்திராபதி தீர்ப்பளித்தார்.

கோவை தொடர் குண்டு வெடிப்பு நடத்த சதித் திட்டம் தீட்டியது, குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களை பெற்றுத்தர ஏற்பாடு செய்தது, அதனை கேரளத்தில் இருந்து கோவைக்கு கொண்டுவர உதவியது, மத மோதலை உருவாக்கும் வண்ணம் உரையாற்றியது உள்ளிட்ட மதானிக்கு எதிரான எந்தக் குற்றச்சாற்றும் அரசு தரப்பால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி தீர்ப்பளித்ததும், மதானியை உடனடியாக விடுதலை செய்யுமாறு அவருடைய வழக்கறிஞர் நீதிபதிக்கு கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி உத்திராபதி, மதானிக்கு எதிரான குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்படவில்லை என்றுதான் தான் கூறியதாகவும், அவரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்ததாகத் தான் கூறவில்லை என்று கூறினார்.

குற்றச்சாற்றுகள் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில், அவரை எவ்வாறு விடுவிக்காமல் இருக்க முடியும் என்று மதானியின் வழக்கறிஞர் கேட்டதற்கு, அவருக்கு பிணைய விடுதலை அளிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதி பதிலளித்தார்.

மதானி வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவாரா? அல்லது பிணையில் விடுவிக்கப்படுவாரா? என்பது குறித்து இன்று மாலை 4 மணிக்கு தெரிவிக்கப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்