கோவை குண்டு : மதானி விடுதலை : பாஷா உள்ளிட்ட 30 பேர் குற்றவாளிகள்

Webdunia

புதன், 1 ஆகஸ்ட் 2007 (12:16 IST)
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மதானி விடுதலை செய்யப்பட்டார். தடைசெய்யப்பட்ட அல் - உம்மா நிறுவனர் பாஷா உள்ளிட்ட 30 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அத்வானி கோவையில் பிரச்சாரம் செய்ய வந்தபோது அங்கு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயமுற்றனர்.

இத்தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான அல் உம்மா தடை செய்யப்பட்டது. இத்தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று அல் உம்மா நிறுவனர் பாஷா, பொதுச் செயலர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சித தலைவர் மதானி உள்ளிட்ட 167 பேர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.

2002ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி விசாரணை துவங்கி 2006ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி சாட்சிகள் விசாரணை நடந்தது. இவ்வழக்கில் 17,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில், 1731 ஆதார ஆவணங்களும், 480 ஆதாரப் பொருட்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட 167 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அவர்கள் மீதான தீர்ப்பு இன்று முதல் வழங்கப்படும் என்றும் நீதிபதி உத்ராபதி கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மதானி மீதான குற்றசசாட்டு நிரூபிக்கப்படாததால், அவரை விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. தடைசெய்யப்பட்ட அல் - உம்மா நிறுவனர் பாஷா, பொதுச் செயலர் அன்சாரி உள்ளிட்ட 30 பேர் குற்றவாளிகள் என நீதிபதி உத்ராபதி தீர்ப்பளித்தார்.

குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டியதாகவும், வெடிமருந்துகள் கடத்திச் சென்றாகவும் பாஷா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்