சிக்குன் குனியாவை தடுக்க: 7 கோடி: கருணாநிதி

தமிழகத்தில் சிக்குன் குனியா நோய் பரவாமல் தடுக்க ரூ 7 கோடியே 10 லட்சம் ஒதுக்கி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது சிக்குன் குனியா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நோய் தமிழகத்தில் வந்துவிடக் கூடாது என்பதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுடனும், உயர் அதிகாரிகளுடனும் முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆலோசனை நடத்தினார்.

மக்கள் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை செய்திடும் வகையில், தகுந்த விளம்பரங்களை உடனடியாக செய்திட வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி அப்போது அறிவுறுத்தினார்.

அதன் பிறகும் சிக்குன் குனியா நோய் தமிழகத்தில் பரவும் நிலை ஏற்படுமாயின், உடனடி நடவடிக்கையாக நோய் தடுப்பு மருந்துகளை முன்கூட்டியே வாங்கி தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.

இந்நோய் நிரந்தரமாக தமிழகத்திற்கு வராத அளவிற்கு தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்காக கிராமங்களில் கொசுக்களை அறவே ஒழிக்க வேண்டி 3850 தற்காலிக களப்பணியாளர்களை நியமிக்கவும், அதற்கான பணிகளை நிறைவேற்றிட அரசு சார்பில் ரூ 7 கோடியே 10 லட்சம் நிதியை ஒதுக்கியும் முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்