கே.பி.எஸ். கில் நீக்கப்படவேண்டும் : முன்னாள் வீரர்கள்!

திங்கள், 10 மார்ச் 2008 (14:02 IST)
80 ஆண்டுகளில் முதல் முறையாக ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளுக்கு இந்தியா தகுதி பெறாமல் போனதையடுத்து இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் கில் உட்பட இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் நீக்கப்படவேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நேற்று சாண்டியாகோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்று இறுதி ஆட்டத்தில் பிரிட்டனிடம் இந்தியா 0 - 2 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியதால் பயிற்சியாளர் கார்வாலோ பதவி விலகினார்.

இந்நிலையில் முன்னாள் வீரர் தன்ராஜ் பிள்ளை தோல்வி குறித்து தனது ஆழ்ந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

"இந்த தோல்வி குறித்து எவ்வளவு பேசினாலும் போதாது, நாம் ஒரு மோசமான வரலாற்றை உருவாக்கியுள்ளோம், இந்திய ஹா‌க்கிக்கு இது ஒரு மோசமான தினம். ஹாக்கி கூட்டமைப்பில் உள்ள மூத்த அதிகாரிகள் நீக்கப்படுவதற்கு இதுவே சிறந்த தருணம், நாட்டிற்காக நீண்ட நாட்களாக விளையாடிய என் போன்ற வீரர்களிடம் அவர்கள் உதவி பெற ஒரு நாளும் முயற்சி செய்யவில்லை" என்று கூறியுள்ளார் தன்ராஜ் பிள்ளை.

ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோலி ஏ.பி. சுப்பையா, கில் மட்டுமல்ல, முழு அமைப்பாளர்களையும் தூக்கி எறிய வேண்டியதுதான் என்று கூறியுள்ளார்.

இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் செயலர் ஜோதிகுமாரன், உ.பி. ஹாக்கி அமைப்பின் அதிகாரி ஜே.என். தியாகி ஆகியோரும் வெளியேற்றப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் ஜாஃபர் இக்பால் கூறுகையில், ஹாக்கி சங்கங்கள் தற்போதுள்ள அகில இந்திய நிர்வாக அமைப்பு தேவையா என்பதை முடிவு செய்யவேண்டும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்