சிட்னியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஹர்பஜன் சிங், ஆஸ்ட்ரேலிய வீரர் சைமன்ட்ஸை இனவெறியுடன் விமர்சித்ததாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து ஆட்ட நடுவர் மைக் பிராக்டர் தலைமையிலான ஐ.சி.சி. விசாரணைக் குழு ஹர்பஜன் சிங்கிடம் ஆறரை மணி நேரம் விசாரணை நடத்தியது.
விசாரணையின் போது தாம் சைமண்ட்ஸ் பற்றி எதுவும் கூறவில்லை என்று ஹர்பஜன் சிங் கூறினார். ஆனால் ஹர்பஜன் மீது பான்டிங் , சைமன்ட்ஸ் குற்றம் சாட்டினார்கள்.
சிட்னி போட்டியின் நடுவர்களும், ஹர்பஜன் மீது தவறு ஏதும் இல்லை என்று விசாரணையின் போது தெரிவித்தனர்.
இருந்த போதிலும் விசாரணையின் இறுதியில் ஆஸ்ட்ரேலிய தரப்பு வாதத்தை ஏற்று, ஹர்பஜன் சிங் 3 போட்டிகளில் விளையாட ஆட்ட நடுவர் மைக் புராக்டர் தடை விதித்தார். இந்தத் தடையை எதிர்த்து சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் அப்பீல் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதனிடையே ஹர்பஜன் சிங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் கூட்டம் தற்பொழுது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத்பவார் வீட்டில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஹர்பஜன் சிங்குக்கு விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், இந்த பிரச்சனையில் இறுதி முடிவு எட்டப்படும் வரை அவர் தொடர்ந்து விளையாடலாம் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவர் மால்கம் ஸ்பீட் தெரிவித்துள்ள செய்தி கிடைத்துள்ளது.