பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். எனினும் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற சேலஞ்சர் டிராபி போட்டியில் ஆட்டமிழக்காமல் 91 பந்தில் 116 ரன்கள் குவித்து இந்திய ப்ளூ அணிக்கு வெற்றி தேடித்தந்த தினேஷ் கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசுகையில், அணியில் இடம்பெறாதது நிச்சயம் ஏமாற்றம் அளிக்கிறது என்றும், அகமதாபாத்தில் நடைபெற்ற சேலஞ்சர் போட்டி தனது ஆட்டத் திறனை நிரூபிப்பதாக அமைந்திருந்தது என்றும் கூறினார்.
அணியில் இடம்பெறுவது தனது கைகளில் இல்லை என்ற போதிலும், மீண்டும் அணியில் இடம்பெறும் நம்பிக்கை உள்ளது என்றும் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.