ஆஸ்ட்ரேலிய துவக்க ஆட்டக்காரர் ஜஸ்டின் லாங்கர் கடந்த ஆஷஸ் தொடருடன் ஓய்வு பெற்றதால் டெஸ்ட் அணியில் ஷேன் வாட்சன் அவருக்கு பதிலாக சேர்க்கப்படுவார் என்று ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்ட்டிங் தெரிவித்துள்ளார்!
கடந்த ஆஷஸ் தொடரின் முடிவில் ஆஸ்ட்ரேலிய வீரர்கள் கிளன் மெக்ரா, ஷேன் வார்ன் மற்றும் ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதனையடுத்து லாங்கர் இடத்திற்கு ஆஸ்ட்ரேலிய அணியில் கடும் போட்டி நிலவியது. இதில் ஷேன் வாட்சன் ஒரு நாள் போட்டிகளில் திறமையாக ஆடி வருவதால் டெஸ்ட் அணியிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாக ரிக்கி பாண்ட்டிங் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஷேன் வாட்சன் முதல் வரிசையில் களமிறங்கினால், பின்னால் 7ம் இடத்தில் ஆல் ரவுண்டர் ஆன்ரூ சைமன்ட்ஸ் களமிறங்குவது அணியின் பேட்டிங்கை மேலும் பலப்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆஸ்ட்ரேலிய அணி, இருபதுக்கு20 உலகக் கோப்பை, இந்தியாவில் 7 ஒரு நாள் போட்டிகள், அதன்பிறகு நவம்பரில் இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள், இந்த தொடர் முடிந்தவுடன் இந்தியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள், இதனையடுத்து இந்திய, இலங்கை பங்கு பெறும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் என்று நெருக்கமான தொடர்களை எதிர் நோக்கியுள்ளது.