இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகத்தினை இந்திய கிரிக்கெட் லீக் அபகரிக்க முயற்சி செய்யவில்லை என்று இந்திய கிரிக்கெட் லீக் தலைவர் கபில் தேவ் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கபில் தேவ், பிசிசிஐ நிர்வாகத்தை அபகரித்து கிரிக்கெட்டின் முழு நிர்வாக அமைப்பாக ஐசிஎல் செயல்பட ஒரு போதும் முயற்சி செய்யவில்லை என்றார்.
ஐசிஎல் என்பது இந்திய கிரிக்கெட்டிற்கு மேலும் பல திறமையான வீரர்களை உருவாக்குவதே. ஆனால் ஐசிஎல் மீது பிசிசிஐ காட்டும் இந்த விரோதப்போக்கு ஐசிஎல்-ஐ கிரிக்கெட்டை நிர்வகிக்கும் மற்றொரு அமைப்பாக தோற்றம் பெறச்செய்து வருகிறது.
பிசிசிஐ-க்கு வீரர்களின் நலன் மீது அக்கரை இல்லை என்று குற்றம் சாட்டிய கபில் தேவ், நாட்டிற்காக விளையாடிய முன்னாள் வீரர்களுக்கு வாரியம் ஒன்றுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் வீரர்களிடம் ஒரு காவலதிகாரியை போல் நடந்து கொள்ளும் அணுகுமுறையை பிசிசிஐ கைவிடுவது நல்லது என்று எச்சரித்தார்.
பிசிசிஐ என்பது ஒரு ஜனநாயக அமைப்பு என்று தன்னை குறிப்பிட்டுக் கொண்டாலும் உண்மையில் அது ஒரு எதேச்சதிகாரியைப் போலவே செயல்படுகிறது என்றார்.
கபில் அந்த நிகழ்ச்சியில் ஊடகங்களையும் விட்டுவைக்கவில்லை. ஐசிஎல்-பிசிசிஐ இடையே நடந்து வரும் மோதலை தனக்கும் சுனில் காவஸ்கருக்குமான சொந்த பகைமை போல் ஊடகங்கள் காட்டி வருவதை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நிறைய வீரர்கள் ஐசிஎல் உடன் இணைய விருப்பம் தெரிவித்து தனக்கு தொலைநகல் அனுப்புவதாக தெரிவித்தார்.