விளையாட்டுக் கொள்கை 2007 : நவீன் ஜிண்டால் வரவேற்பு!

Webdunia

புதன், 22 ஆகஸ்ட் 2007 (17:14 IST)
இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவற்றை முழுமையாக சீர்படுத்தி உள்ளூர் போட்டிகளை அதிகப்படுத்தும் நோக்குடன் மத்திய அரசு உருவாக்கியுள்ள விளையாட்டுக் கொள்கை 2007 வரவேற்கத்தக்கது என்று நாடாளுமன்ற உறுப்பினரும், தேச துப்பாக்கிச் சுடுதல் வீரருமான நவீன் ஜிண்டால் கூறியுள்ளார்!

விளையாட்டை முறைப்படுத்தவும், பஞ்சாயத்தில் இருந்து தேச அளவு வரை விளையாட்டு வீரர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக உள்கட்டமைப்பை, ஏராளமான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான அடிப்படைத் திட்டத்தையும் புதிய விளையாட்டுக் கொள்கை கொண்டுள்ளது என்று ஜிண்டால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பயிற்சியாளர்களை பயிற்றுவித்து அதன்மூலம் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர்களை பயிற்றுவிக்கும் இக்கொள்கை, இந்தியாவை முன்னணி விளையாட்டு நாடாக மாற்றும் என்று ஜிண்டால் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்லத்தக்க திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு முழு அளவிற்கு பயிற்சி அளிக்க இக்கொள்கை வழிவகுக்கிறது என்று கூறியுள்ள நவீன் ஜிண்டால், விளையாட்டுத்துறை அமைச்சரின் முன்னோக்கு பாராட்டிற்குரியது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்