சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அப்துல் ரசாக் ஓய்வு!

Webdunia

திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (14:32 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு செய்துள்ளார்!

தென் ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இருபதுக்கு20 முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்யப்படாததே தான் இந்த முடிவுக்கு வந்ததற்கு காரணம் என்று அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி அணிகளில் தனக்கு எந்த வித எதிர்காலமும் இருப்பதாக நினைக்கவில்லை என்று கூறிய ரசாக், அணித் தேர்வாளர்கள் தன்னை அணியில் தேர்வு செய்யாதது மட்டுமே தனது இந்த முடிவுக்கு காரணம் என்றும், தனது எதிர்ப்பைக் காட்டவே இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவில் பிசிசிஐக்கு போட்டியாக துவங்கவுள்ள இந்திய கிரிக்கெட் லீகில் சேர ரசாக்கை லீக் நிர்வாகிகள் அணுகியதாக ஏற்கனவே செய்திகள் வந்துள்ள நிலையில் ரசாக்கின் இந்த திடீர் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் ஆடி அப்துல் ரசாக் 1946 ரன்களை 28.61 என்ற சராசரியுடன் பெற்றுள்ளார். இதில் 3 சதங்களும் 7 அரை சதங்களும் அடங்கும். அதேபோல் டெஸ்ட் பந்து வீச்சில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

231 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 29.96 என்ற சராசரி விகிதத்தின் படி 4,465 ரன்களை எடுத்துள்ள ரசாக், 2 சதங்களையும், 22 அரை சதங்களையும் பெற்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்