விளையாட்டில் இருந்து போதைப் பொருள் பயன்பாட்டை முழுமையாக களைந்திட வகை செய்யும் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு உருவாக்கியுள்ள சர்வதேச உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!
2005 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் நாள் பாரீஸில் நடந்த யுனெஸ்கோவின் 33வது மாநாட்டில் இந்த உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டது.
விளையாட்டு வீரர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது அதிகரித்துவரும் நிலையில், அதனைத் தடுக்கவும், அதனால் உடலிற்கு ஏற்படும் தீங்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வழி கோரும் 2004 ஆம் ஆண்டின் கோபன் ஹேகன் பிரகடனத்திற்கு ஒப்புதல் தந்து யுனெஸ்கோ நிறைவேற்றிய இந்த சர்வதேச உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று செய்தியாளர்களிடம் பேசிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி கூறியுள்ளார்.
யுனெஸ்கோ உடன்படிக்கையை ஒரு மாதத்திற்குள் நடைமுறைக்குக் கொண்டுவர உரிய வழிவகைகள் காணப்படும் என்று கூறிய தாஸ் முன்ஷி, இதற்காக தேச போதைப் பொருள் சோதனை ஆய்வகமும் 6 மாதத்திற்குள் நிறுவப்படும் என்று கூறியுள்ளார். (பி.டி.ஐ.)