சென்னைக்கு அருகே கிரிக்கெட் மைதானம் : அமைச்சரவை ஒப்புதல்

Webdunia

செவ்வாய், 24 ஜூலை 2007 (10:30 IST)
2011 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுவதையொட்டி சென்னைக்கு அருகே சர்வதேச தரத்துடன் கூடிய புதிய கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு இடம் ஒதுக்க தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

சர்வதேச தரத்துடன், அதி நவீன கிரிக்கெட் மைதானம் ஒன்றை சென்னைக்கு அருகே அமைக்க தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. 2011 ஆம் ஆண்டில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் புதிய கிரிக்கெட் மைதானம் கட்ட வேண்டும் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தியது.

இந்நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பழைய மாமல்லபுரம் சாலையில் கருங்குழி பள்ளம் கிராமத்தில் 50 ஏக்கர் அரசு நிலத்தை சில நிபந்தனைகளுடன், 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதென்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்