விமான பயணிகளின் உறவினர்கள் போலீசாருடன் மோதல்

புதன், 26 மார்ச் 2014 (11:12 IST)
கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்கு 239 பேரோடு கடந்த மார்ச் 8 ஆம் தேதி புறப்பட்ட மலேஷிய விமானம் மாயமானது. காணாமல் போன அந்த  விமானம் கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பயணிகள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று மலேஷியா அறிவித்தது. இதற்கு சீன மக்களிடையெ கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.  
 
பீஜிங்கில் உள்ள மலேஷிய தூதரகத்திற்கு சென்ற அவர்கள் "மலேஷிய அரசுதான் கொலை செய்து விட்டது" என்று சத்தமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர் உடல் கூட கண்டெடுக்கப்படவில்லை.இந்த நிலையில் விமானம் கடலில் விழுந்தது என்ற அறிவிப்பை உறவினர்கள் ஏற்கத்தயாராக வில்லை என்று சீன ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில், காணாமல் போன மலேஷிய விமானத்தில் பயணம் செய்த சீனப் பயணிகளின் உறவினர்கள் மலேஷிய தூதரகத்திற்கு வெளியில் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர். விமானம் தொடர்பான உண்மை விவரங்களை வெளியிட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 
 
மலேஷிய விமானத்தில் பயணம் செய்த 239 பயணிகளில் 158 பேர் சீனர்கள் ஆவர். அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுமார் 300 பேர் மலேஷிய அரசு எங்களை ஏமாற்றிவிட்டது, எங்களது உறவினர்களை திருப்பித்தர வேண்டும் என்று கோஷமிட்டனர்.   
 
தூதரகத்தை நெருங்கியபோது தூதரை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் தூதரகத்தின் வெளியில் உள்ள நிருபர்களிடம் அவர்கள் பேச முயன்றபோது பாதுகாப்பு படையினர் தடுத்தனர். இதனால் மோதல் வெடித்தது. அப்போது போராட்டக்காரர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசி போலீசாரை தாக்கினர். மேலும், அவர்கள் தூதரக அலுவலகத்தையும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் தூதரக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்