சிறுநீர் கழித்து பாசனத்திற்கு நீர் வழங்க முடியுமா...?

திங்கள், 8 ஏப்ரல் 2013 (12:38 IST)
FILE
அணைகளில் நீர் வற்றிப்போனால் சிறுநீர் கழித்து பாசனத்திற்கு நீர் வழங்க முடியுமா என்னும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அஜித் பவாரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டுமென எதிர்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த ஒரு விவசாயி, தனது நிலத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த 55 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்நிலையில், புனேயில் நடைபெற்ற ஓர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார், 'அணையில் தண்ணீர் இல்லாத நிலையில் அவருக்கு மட்டும் எப்படி தண்ணீர் வழங்க முடியும்? அணையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிறாரா? குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் நாம் இருக்கும் நிலையில் சிறுநீர் கூட சுலபமாக வருவதில்லையே? என கேலியாக கூறினார்.

அஜித் பவார் கூறிய கருத்துக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அவர் தான் கூறிய கருத்து பொதுமக்களின் உணர்ச்சிகளை காயப்படுத்தியிருந்தால், அதற்கு நான் மன்னிப்பு தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலத்தில் நிலவும் வறட்சியை சரி செய்ய தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

அஜித் பவார் மன்னிப்பு கேட்டதையும் பொருட்படுத்தாது எதிர்க்கட்சிகளான பா. ஜா.க, சிவா சேனா ஆகிய கட்சிகள் அஜித் பவார் உடனடியாக பதவியிலிருந்து விலக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளன.

இதுக்குறித்து கூறிய பா.ஜ.கட்சியின் செய்தி தொடர்பாளர், பிரகாஷ் ஜவதேக்கர், இத்தகைய கேவலமான கருத்தை, துணை முதல்வர் பதவியிலிருக்கும் ஒருவர் தெரிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதனை கூறிய அஜித் பவார் உடனடியாக பதவிலிருந்து நீக்கபட வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்