ஜனா‌திப‌தி தே‌ர்தலை புற‌க்க‌ணி‌த்தது இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்!

வெள்ளி, 22 ஜூன் 2012 (09:02 IST)
குடியரசு‌த் தலைவ‌ர் தேர்தலை இந்திய கம்யூனிஸ்‌ட், புரட்சிகர சோசலிஸ்டு கட்சிகள் புறக்கணி‌க்க‌ப் போவதாக அ‌றி‌வி‌த்து‌ள்ளது. அதே சமய‌த்‌தி‌ல் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் கட்சிகள் அறிவித்துள்ளன.

அடுத்த மாதம் 19ஆ‌ம் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி, சங்மா ஆகியோரில் யாரை ஆதரிப்பது என்று அறிவிக்காமல் இடதுசாரி கட்சிகள் குழ‌ம்‌பி இரு‌ந்தன. பா.ஜ.க தனது முடிவை அறிவித்த பின்னர், தாங்கள் கூடி விவாதித்து முடிவை அறிவிப்பதாக தெரிவித்தன.

அதன்படி, சங்மாவுக்கு ஆதரவு அளிப்பதாக நேற்று பா.ஜனதா அறிவித்ததும், மாலையில், இடதுசாரி கட்சிகள் கூடி விவாதித்தன. 1 மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்த கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் பிரகாஷ் கரத், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன், பார்வர்டு பிளாக் கட்சியின் தேபபிரதா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்டு கட்சியின் சந்திரசூடன் மற்றும் பல முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டதுபோல், இடதுசாரி கட்சிகளின் கூட்டத்திலும், குடியரசு‌த் தலைவ‌ர் வேட்பாளர் பற்றி முடிவு எடுப்பதில் கருத்தொற்றுமை ஏற்படாமல், பிளவு ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் கட்சிகளும், குடியரசு‌த் தலைவ‌ர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக இந்திய கம்யூனிஸ்டு, புரட்சிகர சோசலிஸ்டு கட்சிகளும் அறிவித்தன.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் கூறுகை‌யி‌ல், மாறுபட்ட முடிவு எடுத்தாலும் இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து, இணைந்தே செயல்படும். ஒரு சிறிய, லேசான கருத்து வேறுபாடுதான் ஏற்பட்டு உள்ளது. மற்றபடி இடதுசாரி கட்சிகள் எப்போதும் இணைந்தே செயல்படும். இங்கு பிளவு என்பது கிடையாது. மக்களுக்காக தொடர்ந்து, ஒருங்கிணைந்தே போராடுவோம் எ‌ன்றா‌ர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் பிரகாஷ் கரத் கூறுகையில், பிரணாப் முகர்ஜியை நாங்கள் ஆதரிப்பதால், காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும், அவர்களின் மக்கள் விரோத கொள்கைகளையும் எங்கள் கட்சி தொடர்ந்து எதிர்க்கும் எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்