லோக்பால் குழு ஆலோசனை கூட்டம்; ஆடியோ வெளியிட மத்திய அரசு சம்மதம்

ஞாயிறு, 9 அக்டோபர் 2011 (18:01 IST)
லோக்பால் மசோதா வரைவு தொடர்பாக அன்னா ஹசாரே மற்றும் மத்திய அரசு பிரதிநிதிகள் குழுவினர் இணைந்து கூட்டாக நடத்திய ஆலோசனை உரையாடல் விவரங்களின் ஆடியோ பதிவை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

வலுவான லோக்பால் ‌மசோதா கொண்டுவர வலியுறுத்தி அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து மத்திய அரசு லோக்பால் மசோதா குறித்த வரைவினை தயாரிக்க முன்வந்தது.

இதன்படி அன்னா ஹசாரே தலைமையிலான ஐவர் குழுவினரும், மத்திய அமைச்சர்கள் அடங்கிய ஐவர் குழுவினரும் கூட்டாக இணைந்து பல முறை ஆலோசனை நடத்தி லோக்பால் மசோதா குறித்த வரைவினை தயாரித்தனர்.

ஆனால் பிரதமரையும் விசாரிக்க ஏற்க மறுக்கும் இந்த மசோதா பல் இல்லாத மசோதா என்று ஹசாரே விமர்சித்திருந்தார். இந்த மசோதா தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.

இம்மசோதாவை வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட அமைச்சர் சாலமன்குர்ஷித் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த ‌மசோதா குறித்து இருதரப்பிலும் நடந்த பேச்சுவார்‌த்தை விவரங்களின் ஆடியோ பதிவினை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தனிநபர் பயிற்சித்துறையிடம் எஸ்.சி. அகர்வால் என்பவர் கோரினார்.

இதற்கு தனிநபர் பயிற்சித்துறை, சட்ட அமைச்சகத்தின் அனுமதி பெற்ற பின்னர் வெளியிடப்படும் என கூறியது.

சட்ட அமைச்சகமும் ஒப்புதல் அளித்ததைத்தொடர்ந்து, லோக்பால் மசோதா குறித்த ஆடியோ சி.டி.யின் நகல்கள் விரைவில் வெளியிடப்படும் என தனிநபர் பயிற்சித் துறையின் செயலர் அமர்ஜித்சிங் கூறினார்.



வெப்துனியாவைப் படிக்கவும்