மும்பை பத்திரிகையாளர் கொலையில் 3 பேர் கைது; பின்னணியில் தாவூத் கும்பல்
புதன், 15 ஜூன் 2011 (18:41 IST)
மும்பை பத்திரிகையாளர் ஜோதிர்மய தேவ் படுகொலையின் பின்னணியில் தாவூத் இப்ராகிம் கும்பல் உள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையிலிருந்து வெளியாகும் 'மிட் டே" ஆங்கில நாளேட்டில் கிரைம் நிருபராக பணியாற்றி வந்த ஜோதிர்மய தேவ், நிழலுலக தாதாக்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும், அவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் கொண்டிருந்த தொடர்பு குறித்தும், எண்ணெய் கலப்பட கும்பல் குறித்தும் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தேவ் கடந்த வாரம் பட்டப்பகலில் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைக் கொன்றது எந்த கும்பல் என்பது குறித்து குழப்பம் நிலவி வந்தது.
இதனையடுத்து ஜோதிர்மய தேவ் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என மும்பை பத்திரிகையாளர்கள் வலியுறுத்தியதால், குற்றவாளிகளை பிடிப்பதில் மும்பை காவல்துறைக்கு நெருக்கடி அதிகரித்தது.
இந்நிலையில் ஜோதிர்மய தேவ் படுகொலையின் பின்னணியில் தாவூத் இப்ராகிம் கும்பல் உள்ளதாகவும், இது தொடர்பாக தாவூத் கூட்டாளி சோட்டா ஷகீல் கோஷ்டியை சேர்ந்த் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்பால் ஹடேலா மற்றும் மேட்டீன் ஆகிய இரண்டு பேர் மும்பையிலும், மற்றொருவன் புனேவிலும் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் மும்பை காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது.
ஜோதிர்மய தேவை கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆயுதம், தாவூத் இப்ராஹிம் கோஷ்டியினர் வழக்கமாக பயன்படுத்தக் கூடியது என்று தெரியவந்துள்ளதால், இந்த கொலையின் பின்னணியில் தாவூத் கும்பலுக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஜோதிர்மய தேவை கொன்றது,அவர் வெளியிட்ட செய்திகளால் பாதிக்கப்பட்ட காவல்துறை-அரசியல்வாதிகள் கும்பலா அல்லது எண்ணெய் கலப்பட கும்பலா அல்லது நிழலுக தாதாக்கள் கும்பலா என்பது குறித்தும் குழப்பம் நிலவி வந்த நிலையில், எண்ணெய் கலப்பட மற்றும் கடத்தல் கும்பல்தான் இந்த கொலைக்கும்பலை ஏவி விட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
எண்ணெய் கலப்பட கும்பலிடமிருந்து தாவூத் கும்பலுக்கு கிடைத்த "சுபாரி"யை (கொலை செய்வதற்கான காண்ட்ராக்ட்) தொடர்ந்தே, இந்த கொலை அரங்கேறியுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
எண்ணெய் மாஃபியா கும்பலுக்கும், அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையிலுள்ள சில அதிகாரிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த விரிவான கட்டுரை ஒன்றை வெளியிடுவதற்காக,அது தொடர்பான தகவல் திரட்டும் பணியில் ஜோதிர்மய தேவ் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையிலேயே, அவர் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.