ரூ.200 கோடி 2ஜி லஞ்சப் பணமே: ம.பு.க.

திங்கள், 30 மே 2011 (20:14 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்ற ஸ்வான் டெலகாம் நிறுவனத்தின் உரிமையாளர் டி.பி.ரியால்டியிடமிருந்து கலைஞர் தொலைக்காட்சியின் கணக்கில் சேர்க்கப்பட்ட ரூ.200 கோடி லஞ்சப் பணமே என்று ம.பு.க. வழக்குரைஞர் வாதிட்டார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் கூட்டுச் சதியாளராக குற்றம் சாற்றப்பட்டுள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு பிணைய விடுதலை அளிப்பதை எதிர்த்து மத்திய புலனாய்வுக் கழக வழக்குரைஞர் யு.யு.லலித் இவ்வாறு கூறியுள்ளார்.

கனிமொழிக்கும், கலைஞர் தொலைக்காட்சியின் மேலான் இயக்குநர் சரத் குமார் ஆகியோர் தங்களுக்கு ம.பு.க. சிறப்பு நீதிமன்றம் பிணைய விடுதலை மறுத்துவிட்டதை எதிர்த்து செய்த மேல் முறையீட்டு மனு மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது.

உயர் நீதிமன்ற நீதிபதி அஜித் பாரியோக் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் கனிமொழியின் சார்பாக வாதிட்ட மூத்த வழக்குரைஞர் அல்டாஃப் அகமது, டி.பி.ரியால்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த ரூ.200 கோடி பணம் கடன்தானே தவிர, அதில் ஐயத்திற்கு இடமேதுமில்லை என்று கூறினார்.

“இவ்வழக்குத் தொடர்பான எல்லா ஆவணங்களும் ம.பு.க.விடம் உள்ள நிலையில், எதற்காக எங்களை சிறைபடுத்தி வைக்க வேண்டும்” என்று அல்டாஃப் அகமது வினவினார்.

இதனை எதிர்த்து வாதிட்ட அரசு சிறப்பு பொது வழக்குரைஞர் யு.யு.லலித், லஞ்சமாகப் பெற்ற ரூ.200 கோடியை கடனாகப் பெற்றதாக ஒரு புகைத் திரையை உருவாக்குகின்றனர் என்று கூறினார்.

“இந்த ரூ.200 கோடி பணப் பரிவர்த்தனையில் இரு நிறுவனங்களும் எந்த ஒரு பத்திரத்தையும் உருவாக்கிக்கொள்ளவில்லை. எனவே இது ஊழல் பண பரிவர்த்தனேயே” என்று லலித் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜித் பாரியோக், தீர்ப்பை தள்ளிவைப்பதாக அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்