ஆந்திரா: எதிர்கட்சி எம்.எல்.ஏ.வை அடித்த அமைச்சர் ராஜினாமா
புதன், 30 மார்ச் 2011 (15:18 IST)
ஆந்திராவில் எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏவை அடித்த அமைச்சர் ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி தமது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
ஆந்திராவில் எதிர்கட்சியான தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ஒருவரை, வேளாண் அமைச்சரும், மறைந்த முன்னாள் முதலவர் ஒய்.எஸ். ஆர். சகோதரருமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி, கடந்த திங்கட்கிழமையன்று சட்டசபையில் வைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை கை நீட்டி அறைந்த அமைச்சர் ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை முதலமைச்சர் கிருஷ்ண குமார் ரெட்டியிடம் அளித்தார்.
அவரது எம்.எல்.சி. பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்ததாலும்,தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏவை அடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியதாலும் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டாலும், கடப்பா மக்களவை தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விவேகானந்த ரெட்டி போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.