அமைச்சரவை மாற்றம்? பிரதமருடன் சோனியா காந்தி சந்திப்பு

செவ்வாய், 18 ஜனவரி 2011 (11:54 IST)
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்திற்கு வந்து சந்தித்துப் பேசியது, மத்திய அமைச்சரவையில் மாற்றம் நடைபெறவுள்ளது என்ற செய்திகளுக்கு வலு சேர்த்துள்ளது.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேற்று பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை நடந்துள்ள பிரதமர் - சோனியா சந்திப்பு, இந்த வார இறுதியிலேயே அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்துவதாக தலைநகர் வட்டாரங்கள் கூறுகின்றன.

சோனியாவுடன் அவரது தனிச் செயலர் அகமது பட்டேலும் பிரதமர் சந்திப்பி்ன்போது உடனிருந்துள்ளார். ஆயினும் இந்த சந்திப்பு பொதுவாக நடப்பதுதான் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக-வைச் சேர்ந்த ஆ.இராசா (2ஜி ஊழல் குற்றச்சாற்று காரணமாக), பிரதமர் அலுவலக அமைச்சராகவும், அறிவியல் துறை அமைச்சராகவும் இருந்த பிரிதிவிராஜ் சவான், அயலுறவு துணை அமைச்சராக இருந்த சசி தரூர் ஆகியோர் விலகியுள்ளதால், இவர்கள் வகித்த பல அமைச்சக பொறுப்புகளை பிரதமர் உள்ளிட்ட மற்ற அமைச்சர்கள் வகித்து வருகின்றனர். குறிப்பாக சரத் பவார், கபில் சிபல் ஆகியோர் கூடுதல் அமைச்சக பொறுப்புகளை கவனித்து வருகின்றனர்.

எனவே, அமைச்சரவை மாற்றம் செய்ய வேண்டும் என்பதில் பிரதமர் முனைப்பாக உள்ளார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, இந்த சந்தரபத்தை பயன்படுத்திக் கொண்டு இளம் இரத்தங்களை அமைச்சரவைக்குக் கொண்டு வர பிரதமர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக -வைச் சேர்ந்த ஆ.இராசா பதவி விலகி விட்டதால், அக்கட்சிக்குறிய பங்காக ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்