2ஜி ஊழல்: ராசாவிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை

வெள்ளி, 24 டிசம்பர் 2010 (19:27 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணைக்காக இன்று விசாரணைக்கு ஆஜரான முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

குற்றவியல் சட்டப் பிரிவு 160 ன் கீழ் வழக்குப் பதிவுசெய்து ராசாவுக்கு, மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ அழைப்பாணை அனுப்பியது.இதற்கான அறிவிப்பும் ராசாவின் டெல்லி வீட்டில் ஒட்டப்பட்டது.

இந்தக் குற்றப் பிரிவின் கீழ் அழைப்பாணை பெற்றவர்கள், சிபிஐ அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு நேரில் ஆஜராகி பதில் அளிப்பது கட்டாயமாகும்.

அதன்படி சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக ராசா நேற்று முன்தினமே சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகள் முன்னர் ஆஜரானார்.

அங்கு அவரிடம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்