2ஜி அலைக்கற்றை : சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை - பா.ஜ.க.

ஞாயிறு, 5 டிசம்பர் 2010 (16:04 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை பா.ஜ.க. திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் தொடர்ந்து முடக்கி வருகின்றன எதிர்க்கட்சிகள்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளிடையே பலமுறை சமரச முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. மக்களவைத் தலைவர் மீரா குமாரும் அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசினார். ஆனால் எதிர்க்கட்சிகள் சமாதானம் அடையவில்லை.

இதற்கிடையே, 2ஜி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி எம்.பி.களும் இடம்பெற்றுள்ள பொது கணக்குக் குழு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. எனவே நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு அவசியம் இல்லை. ஆதலால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சையது ஷானவாஸ் உசேன், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு காங்கிரஸ் ஏன் பயப்படுகிறது. விசாரணை நடத்தினால் காங்கிரஸ் தலைமையிலான அரசின் ரகசியங்கள் வெளி வந்துவிடும் என்று பயப்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற தங்களது கோரிக்கையில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாக உசேன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்