அருந்ததி, கிலானி மீது வழக்கு: நீதிமன்றம் உத்தரவு

சனி, 27 நவம்பர் 2010 (17:32 IST)
காஷ்மீர் பிரச்சனை மீது டெல்லியில் நடந்த கருத்தரங்கில் இந்தியாவிற்கு எதிராக பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று கூறி, ஹூரியாத் தலைவர் சையது அலி ஷா கிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருந்ததி ராய், கிலானி ஆகியோர் பேசியதில் நாட்டிற்கு எதிராக எதுவும் பேசவில்லை என்று டெல்லி காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையை நிராகரித்துள்ள டெல்லி மாநகர குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி நவிதா குமாரி பகா, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறி, வழக்கு விசாரணையை ஜனவரி 6, 2011 அன்று தள்ளிவைத்தார்.

அக்டோபர் மாதம் 30ஆம் தேதி டெல்லியில் நடந்த அந்த கருத்தரங்கில், இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் ஒருபோதும் இருந்ததில்லை என்று அருந்ததி ராய் பேசினார். அதற்கான ஆதாரங்களை எடுத்துக் கூறி அவர் பேசியதிற்கு பாஜக உள்ளிட்ட மதவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்