கரைபுரண்டோடுகிறது யமுனை: வெள்ள அபாயத்தில் டெல்லி

வெள்ளி, 10 செப்டம்பர் 2010 (17:50 IST)
ஹரியானா மாநிலத்தில் திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து யமுனை நதியில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், டெல்லியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யமுனை நதியில் இன்று மதியம் 3 மணி அளவில் வெள்ள நீர் அபாய அளவுக்கு ஒரு மீட்டர் உயரத்தில், அதாவது 205.88 மீட்டர் உயரத்திற்கு ஓடியதாக டெல்லி வெள்ள கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாழ்வான பகுதிகளில் குடியிருப்போரை அங்கிருந்து அழைத்துச் செல்ல 74 படகுகள் மற்றும் 68 "டைவர்கள்" எனப்படும் நீச்சல் நிபுணர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

இதனிடையே வெள்ளம் காரணமாக மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார். ,

முன்னதாக நேற்றே தாழ்வான இடங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு நிர்வாகம் எச்சரித்திருந்தது.

இவ்வாறு பாதுகாப்பான இடங்களை தேடி வருபவர்களுக்காகவே, பல இடங்களில் தற்காலிக தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்