பீகார் வெள்ள பாதிப்பு மறுசீரமைப்பிற்கு உலக வங்கி 220 மில்லியன் டாலர் கடனுதவி

வெள்ளி, 10 செப்டம்பர் 2010 (17:24 IST)
பீகார் மாநிலத்தில் கோசி நதியால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாலங்கள், வீடுகள் கட்டுவது உள்ளிட்ட மறுசீரமைப்புப் பணிகளுக்கு உலக வங்கி 220 மில்லியன் டாலர் (ரூ.990 கோடி) கடன் வழங்கியுள்ளது.

கோசி நதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் உரிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த பீகார் கோசி வெள்ள மறுசீரமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்குத்தான் உலக வங்கி இந்த கடன் உதவியைச் செய்துள்ளது என்று அதன் உலக வங்கியின் இந்திய கிளை இயக்குனர் ராபர்ட்டோ ஜாகா கூறியுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் கோசி வெள்ளத்தால் வீடிழந்த ஒரு இலட்சம் பேருக்கு வீடு கட்டித் தருதல், 90 இடங்களில் பாலம் கட்டுதல், 290 கி.மீ. தூரத்திற்கு ஊரக சாலைகளை போடுதல் ஆகியன அடங்கும். இது மட்டுமின்றி, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளும் எதிர்கால கண்ணோட்டத்தில் மேற்கொள்ளப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்