போபால் துயரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சீராய்வு மனு

திங்கள், 2 ஆகஸ்ட் 2010 (19:36 IST)
போபால் விஷ வாயு கசிவு வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட குறைந்தபட்ச தண்டனை விதிக்க காரணமாக இருந்த தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தக்கோரும் சீராய்வு மனு ஒன்றை, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்தது.

15,000 க்கும் அதிமானோரை பலிகொண்ட போபால் விஷ வாயு கசிவு வழக்கை விசாரித்த போபால் விசாரணை நீதிமன்றம், இவ்வழக்கில் குற்றவாளிகளான யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தின் தலைவர் கேசுப் மஹிந்திரா, நிர்வாக இயக்குனர் விஜய் கோகலே, துணை தலைவர் முகுந்த் உள்ளிட்ட 7 பேர்களுக்கு வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதித்து கடந்த ஜூன் 7 ஆம் தேதியன்று தீர்ப்புக்கூறியது.

இத்தீர்ப்பு, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, பொதுமக்களிடையேயும் அதிருப்தியை உருவாக்கியது.

முன்னதாக இவ்வழக்கில், மேற்கூறிய குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாற்றுக்களின் வீரியத்தை குறைக்கும்விதமாக, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை கிடைக்கக்கூடிய வகையில், அவர்கள் மீது பதிவு செய்த வழக்கு பிரிவை இபிகோ 304 பிரிவு - II லிருந்து இபிகோ 304 ஏ பிரிவுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி உத்தரவிட்டது.

அரசு தரப்பில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்படாததன் காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், 1996 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆய்வுக்கு உட்படுத்தும் சீராய்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில், சிபிஐ இன்று தாக்கல் செய்தது.

சிபிஐ தரப்பில் இம்மனுவை அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வான்வதி தாக்கல் செய்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்