விலைவாசி உயர்வுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கே காரணம்: பா.ஜனதா

திங்கள், 5 ஜூலை 2010 (18:56 IST)
பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கே காரணம் என்று பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரி குற்றம்சாற்றியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பா.ஜனதா அழைப்புவிடுத்திருந்த நிலையில்,அதன் ஒரு பகுதியாக டெல்லி சாந்தினி சவுக்கில் அக்கட்சித் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நிதின்கட்கரி விலைவாசி உயர்வுக்கு சாதி, மதம், இனம் கிடையாது என்றும், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், மோசமான நிர்வாகமும்தான் விலைவாசி உயர்வுக்கு அடிப்படை காரணம் என்றும் குற்றம்சாற்றினார்.

காங்கிரஸ் அரசு எப்போதெல்லாம் மத்தியில் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் விலைவாசி உயர்வு அல்லது பணவீக்கம் ஏற்படுகிறது என்று குற்றம்சாற்றிய கட்கரி, அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சிக்கு வரும்போது விலைவாசி 100 நாட்களுக்குள் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளிப்பார்கள். ஆனால் விலையை குறைப்பதற்கு பதிலாக மூன்று அல்லது நான்கு மடங்காக உயர்த்திவிடுவார்கள் என்றார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேஜகூ இப்பிரச்னையை எழுப்பும் என்று தெரிவித்த அவர், பெட்ரோலின் அடிப்படை விலை ரூ. 16.30 ஆக மட்டுமே உள்ளதாகவும், ஆனால் வரிவிதிப்புக்கு பின்னரே அது ரூ.53 ஆக விற்கப்படுவதாகவும் கூறினார்.

மேலும் பெட்ரோல் விலை பல நாடுகளில் மிகக்குறைவாக உள்ளதாக தெரிவித்த அவர், விலை உயர்வுக்கு பிரதமர் மன்மோகன் சிங்தான் காரணம் என்றும், ஏழைகளின் பணம் பன்னாட்டுக்கம்பெனிகளின் கைகளுக்கு செல்வதாகவும் குற்றம்சாற்றினார்.

அத்துடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஐமுகூ தலைவர் சோனியா காந்தியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியும் மவுனமாக இருப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்