ஜார்க்கண்ட் முதலமைச்சர் சிபு சோரனுடன் சமரசம் இல்லை என்றும், அவருக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறும் முடிவில் மாற்றமில்லை என்றும் பா.ஜனதா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் நேற்று முன்தினம் கொண்டு வந்த வெட்டுத் தீர்மானத்திற்கு எதிராக ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சித் தலைவர் சிபுரோசன் வாக்களித்ததால்,ஜார்க்கண்ட் மாநிலத்தில் அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜனதா விலக்கிக் கொள்வதாக அறிவித்தது.
இதற்கு பதில் நடவடிக்கையாக, அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க சிபுசோரன் ஆதரவு அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அப்படி ஒரு திட்டம் ஏதுமில்லை என்று காங்கிரஸ் அறிவித்துவிட்டது.
மேலும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையை முடக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாயின.
இது சிபுசோரனுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனையடுத்து அவர் மீண்டும் பா.ஜனதாவுடன் சமரசமாக போக விரும்பி, அது குறித்து அத்வானி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.
வெட்டுத் தீர்மானத்தின்போது அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ள அவர், ஆதரவு வாபஸ் பெறும் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு அதில் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் பா.ஜனதா அதனை நிராகரித்துவிட்டது.
இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் முடிவை, ஜார்க்கண்ட் ஆளுநர் ஃபரூக்கை தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை நேரில் சந்தித்து தெரிவிப்பார்கள் என்று பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் இன்று தெரிவித்தார்.