சிபு சோரன் அரசிற்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க.விலக்கிக்கொண்டது
புதன், 28 ஏப்ரல் 2010 (15:27 IST)
மத்திய அரசிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த வெட்டுத் தீர்மானத்திற்கு எதிராக, அரசிற்கு ஆதரவாக, சிபு சோரன் வாக்களித்தை அடுத்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில் அவருடைய தலைமையிலான அரசிற்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
பா.ஜ.க. ஆதரவுடன் நான்கு மாதங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைத்த சிபு சோரன், மக்களவை உறுப்பினராக நீடிக்கிறார். மாநில சட்டப் பேரவைக்கான தேர்தலில் போட்டியிட்டு 6 மாதத்திற்குள் அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில், மத்திய அரசிற்கு எதிராக பா.ஜ.க., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த வெட்டுத் தீர்மானத்தை எதிர்த்து மக்களவையில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் அரசிற்கு ஆதரவாக சிபு சோரன் வாக்களித்தார். இது பா.ஜ.க.வை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் இன்று காலை அக்கட்சியின் தலைவர் நித்தின் கட்காரி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் சிபு சோரன் தலைமையிலான அரசிற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொ்ளவது என்று தீர்மானிக்கப்பட்டது.
“சிபு சோரன் அரசிற்கு அளித்துவரும் ஆதரவை உடனடியாக விலக்கிக்கொள்வதென கட்சி முடிவு செய்துள்ளது. அரசிற்கு ஆதரவாக வாக்களித்த சிபு சோரனின் நடத்தை மிகவும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. இது பா.ஜ.க.விற்கு செய்த துரோகமாகவே கட்சி கருதுகிறது” என்று கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் அனந்த் குமார் கூறியுள்ளார்.