பாக்.கிற்கு உளவு பார்த்த இந்திய பெண் தூதரக அதிகாரி கைது
செவ்வாய், 27 ஏப்ரல் 2010 (17:38 IST)
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இந்திய பெண் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அயலுறவுத் துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் மாதுரி குப்தா(53).இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தில், இரண்டாவது நிலை செயலர் அதிகாரியாக பணியில் இருந்த இவர், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக தெரிய வந்தது.
இதனையடுத்து கடந்த நான்கு தினங்களுக்கு முன்னதாக இவரை, பூடானில் நடைபெற உள்ள "சார்க்" மாநாடு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கூறி, அவசரமாக டெல்லி வருமாறு அதிகாரிகள் தந்திரமாக அழைத்தனர்.
இதனையடுத்து மாதுரி குப்தாவும் டெல்லி வந்தார்.இந்நிலையில் கிழக்கு டெல்லியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தில் ஏறக்குறைய 3 ஆண்டு காலம் பணியில் இருந்த இவர், இந்திய அரசு குறித்த முக்கியமான தகவல்களை தான் தொடர்பு வைத்திருந்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளியிடம் கொடுத்து வந்தது இந்திய புலனாய்வு அமைப்பான ஐபி-யின் கண்காணிப்பில் தெரியவந்ததாகவும், இதனையடுத்தே அவர் கைது செய்யப்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சக செயலர் ஜி.கே. பிள்ளை இன்று தெரிவித்தார்.
"ரா" உளவு அமைப்பின் இஸ்லாமாபாத் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த ஆர்.கே.ஷர்மா என்ற அதிகாரியிடமிருந்துதான் மாதுரி குப்தா, தகவல்களை பெற்று பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு கடத்தியுள்ளார்.
இதன் காரணமாக ஷர்மாவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதே சமயம் அவர் தெரிந்தே தகவல்களை மாதுரி குப்தாவுக்கு கொடுத்து வந்தாரா அல்லது அறியாமல் கொடுத்து வந்தாரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.