பாபர் மசூதியை இடித்தது திட்டமிட்ட செயல்: சிதம்பரம்

புதன், 9 டிசம்பர் 2009 (09:36 IST)
''அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தது, கரசேவகர்களின் திட்டமிட்ட செயல்'' என்று பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், லிபரான் கமிஷன் அறிக்கையின் மீது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம் பேசுகை‌யி‌ல், அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் பல்வேறு மாநிலங்களில் இருந்து கரசேவகர்கள் குவிந்தனர். அவர்களுக்கு தர்க்க ரீதியான ஆதரவும் ஏற்படுத்தி தரப்பட்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் கரசேவகர்கள் பெருமளவில் குவிந்தபோது, உ.பி.யில் ஆட்சி செய்து வந்த கல்யாண்சிங் தலைமையிலான பா.ஜனதா அரசு இது பற்றி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌திலு‌ம், தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலிடமும் சங் பரிவார் அமைப்பின் கரசேவகர்களால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றும், பாபர் மசூதி பாதுகாக்கப்படும் எனவும் பொய்யான உறுதிமொழிகளைத் தந்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, மத்தியில் ஆட்சியில் இருந்த நரசிம்மராவ் அரசு அரசியல் ரீதியாக தவறான முடிவை எடுத்தது. பா.ஜனதா அளித்த வாக்குறுதியை முழுவதுமாக நம்பி நாங்கள் நம்பிக்கையுடன் தூங்கும் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டோம். அப்போது அரசு எடுத்த இந்த முடிவு வருத்தத்துக்குரியது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு காரணம், கரசேவகர்களிடையே தன்னிச்சையாக எழுந்த உத்வேகம்தான் என்று பா.ஜனதா கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மசூதி இடிக்கப்பட்டது, திட்டமிட்டு நடத்தப்பட்ட, மனித உணர்வுகளை மதிக்காத கொடூரமான செயலாகும்.

எல்.கே.அத்வானியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷியும், அயோத்தியில் கரசேவகர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் மிகவும் மென்மையான அணுகுமுறையை கையாண்டனர். இது, குற்றம் இழைக்கப்படுவதற்கு அளித்த மறைமுக ஆதரவாகும்.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆ‌ம் தேதி காலை அயோத்தியில் அத்வானியும், ஜோஷியும் வினய் கத்தியார், அசோக் சிங்கால் மற்றும் இதர சங் பரிவார் தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது பற்றி தகவல் இல்லை. அன்று காலை நீங்கள் என்ன பேசினீர்கள் எதைப் பற்றி விவாதித்தீர்கள், என்ன முடிவெடுத்தீர்கள் என்பது பற்றி நான் கேட்க விரும்புகிறேன். காலையில் நீங்கள் சாப்பிடுகிறீர்கள். அதன் பிறகு அயோத்தியில் மசூதி இருந்த இடத்துக்கு செ‌ல்‌கி‌றீ‌ர்க‌ள். அன்று காலை நீங்கள் என்ன பேசினீர்கள், என்ன முடிவு எடுத்தீர்கள் என்பது பற்றி எங்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நீங்கள் தெரிவிக்கவேண்டும்.

மசூதி இடிக்கப்பட்ட நாளன்று அயோத்தியில் பா.ஜனதா தலைவர் வாஜ்பாய் இல்லை. இதற்காக அவருக்கு நான் மதிப்பளிக்கிறேன். ஆனால், அதற்கு முதல் நாள் நடந்த கூட்டத்தில் பேசிய வாஜ்பாய், கரசேவகர்கள் அனைவரும் அயோத்திக்கு போகவேண்டும் என்று கேட்டுக் கொண்டாரே?

மசூதியை இடிக்கும் நோக்கத்தில்தான் சங் பரிவார் அமைப்பினர் அயோத்திக்கு சென்றுள்ளனர். 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆ‌ம் தேதி நடந்த கரசேவை பற்றிய அனைத்து தகவல்களும் பா.ஜனதா தலைவர் அத்வானிக்கு தெரியும். அயோத்தியில் நடந்த அனைத்து நிகழ்வுகளும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. கரசேவகர்களால் மசூதி இடிக்கப்பட்டபோது காவ‌ல்துறை‌யினரு‌ம், மாவட்ட நிர்வாகத்தினரும் அதை அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

மசூதி இடிப்புக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துளி கூட வெட்கமோ, வருத்தமோ அடையவில்லை. மசூதி இடிக்கப்பட்டதால், 1992ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1993ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நாட்டில் இனக்கலவரம் நடந்தது. இதில் 2,019 பேர் பலியானார்கள். இது இன்றளவும் நமது நாட்டை பிளவு படுத்துவதாக அமைந்திருக்கிறது. பா.ஜனதாவின் இந்த பிரித்தாளும் இந்திய சிந்தனைகளை 2004ஆம் ஆண்டும், 2009ஆம் ஆண்டும் மக்கள் நிராகரித்து விட்டார்கள். இது லிபரான் கமிஷன் குற்றம் சாட்டியதைவிட மிகப்பெரிய தண்டனையாகும் எ‌ன்று ப.சிதம்பரம் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்