மகளிர் கல்வியை மேம்படுத்த சக்சார் பாரத் திட்டம்

செவ்வாய், 8 செப்டம்பர் 2009 (15:11 IST)
புதுடெல்லி: சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த விழாவில் படிப்பறிவில்லாதவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவும், குறிப்பாக மகளிர் கல்வியை மேம்படுத்துவதற்காகவும், `சக்சார் பாரத்' ௦௦௦௦என்ற புதிய திட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் அறிமுகப்படுத்தினார்.

இதற்கான நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவை கல்வியறிவில் மேம்படச் செய்வதற்கான முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் படிப்பறிவில்லாமல் இருப்பதாகவும், பெண்களில் 50 விழுக்காட்டினர் எழுதப் படிக்கத் தெரியாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான படிப்பறிவில்லாதவர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது கவலையளிப்பதாகவும், அதனைப் போக்கவே இந்த சக்சார் பாரத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

எனவே படிப்பறிவின்மை என்பது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

புதிய திட்டம் படிப்பறிவில்லாதவர்களிடம் கொண்டு செல்லப்படுவதோடு, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களிடமும் கொண்டு செல்லப்பட்டு படிப்பறிவு மேம்படுத்தப்படும் என்று பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

அரசின் பல்வேறு முன்னேற்றத் திட்டங்களையும், சட்டங்களையும் கோடிட்டுக் காட்டிய பிரதமர், படிப்பறிவு என்பது அரசின் அனைத்து வெற்றிகளுக்கும் முக்கியமான அடிப்படையாக அமையும் என்றார்.

ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை அளிப்பதற்கு அரசு உறுதிபூண்டிருப்பதாகவும் அவர் கூறினார். அதற்கு நிதி ஒரு தடையாக அமையாது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்