ஹெலிகாப்டர் பறக்கும் தகுதி பெற்றிருந்ததா?

வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (12:37 IST)
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். இராஜசேகர ரெட்டி பயணம் செய்த இரட்டை இயந்திர பெல் 430 ஹெலிகாப்டர் பறக்கும் தகுதிச் சான்றிதழ் பெற்றிருந்ததா என்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன.

பெல் 430 ஹெலிகாப்டரில் ஈ.எல்.டி. என்றழைக்கப்படும் எமர்ஜென்சி லொகேட்டர் டிரான்ஸ்மிட்டர் இருந்தும், விபத்து ஏற்படுவதற்கான நிலையில் அது அபாய சமிக்ஞைகளை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பாதது ஏன் என்ற முக்கிய கேள்வி எழுந்துள்ளது.

அசாதாரண நிலை ஏற்படும்போது இக்கருவி தரை கட்டுப்பாட்டு மையத்தை 121.5 அலைவரிசையில் 243 மெகா ஹெட்ஸ்ஸில் தொடர்பு கொள்ளும் நிலையில் இருந்ததென ஆந்திர மாநில விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை இயக்குனர் கே.வி.பிரம்மானந்த ரெட்டி ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்துள்ளார். ஆனால் அக்கருவி இயங்கவில்லை.

இராஜசேகர ரெட்டியும், ஆந்திர மாநில அரசின் முதன்மைச் செயலர் சுப்ரமணியம், தலைமை பாதுகாப்பு அலுவலர் ஏ.எஸ்.சி. வெஸ்லி, இர்ண்டு விமானிகளான எஸ்.கே.பாட்டியா, கேப்டன் எம்.எஸ். ரெட்டி ஆகியோர் பயணம் செய்து, விபத்திற்குள்ளான பெல் ஹெலிகாப்டர், புறப்படுவதற்கு முன்னர் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரின் ஒப்புதல் பெற்றிருந்ததா என்பதும் கேள்விக்குறியதாக உள்ளது.

விபத்திற்குள்ளான பெல் 430 ஹெலிகாப்டர் 1999ஆம் ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு காலத்தில் வாங்கப்பட்டது. இராஜசேகர ரெட்டி முதல்வரானதும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் தயாரிப்பான ஏ.டபுள்யூ 139 ஹெலிகாப்டரை வாங்கினார். இதில் 8 பேர் வசதியாகச் செல்லலாம். இந்த ஹெலிகாப்டர் பறக்கத் தகுதி பெற்றது என்பதற்கான சான்றிதழ் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரால் 2008ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி வழங்கப்பட்டது. அந்த சான்றிதழ் காலம் 2010ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வரை உள்ளது. இந்த ஹெலிகாப்டர் முழுத் தகுதியுடன் முதல்வரின் அன்றையப் பயணத்திட்டத்திற்கு தயாராக இருந்தது என்றும், ஆனால் அதில் செல்லாமல் பெல் 430இல் அவர் பயணம் மேற்கொண்டது ஏன் என்பதும் சந்தேகத்தை கிளப்புவதாக செய்திகள் கூறுகின்றன.

முதல்வர் இராஜசேகர ரெட்டி பயணம் செய்து விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர், ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து காலை 8.45 மணிக்குப் புறப்பட்டுள்ளது. அதன்பிறகு 09.02 மணி வரை ஷம்ஷாபாத் விமான நிலையத்துடன் தொடர்பில் இருந்தது. பிறகு சென்னை விமான கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்வதாக விமானி கூறியுள்ளார்.

அதுவே கடைசிச் செய்தியாகும். அதன்பிறகு விமானியிடமிருந்தோ அல்லது முதல்வர் உள்ளிட்ட மற்றவர்களிடமிருந்தோ எந்தத் தொடர்பும் இல்லை.

ஹெலிகாப்டர் விமானம் விழுந்து நொறுங்கிக் கிடப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது (விபத்து படங்களைப் பார்க்கவும்)

வெப்துனியாவைப் படிக்கவும்