பன்றி காய்ச்சல்: பலியான மாணவியின் குடும்பம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009 (20:24 IST)
புனேவில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியான மாணவி ரிடா ஷேக்கின் குடும்பத்தினர், மருத்துவமனை நிர்வாகத்திடம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் பன்றி காய்ச்சலுக்கு இந்தியாவில் முதல் பலியாக, மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ரிடா ஷேக், கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

சுமார் 20 தினங்களுக்கு முன்பு, சாதாரணக் காய்ச்சலால் அவதிப்பட்ட ரிடா ஷேக், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, பன்றிக் காய்ச்சல் நோய் தாக்குதலுக்கு ஆளானதாக குற்றச்சாற்று எழுந்தது.

அதன் பின்னர், மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். அந்த மருத்துவமனை மருத்துவர்களின் கவனக்குறைவும் ரிடா ஷேக் மரணத்துக்கு காரணமாக அமைந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், ரிடாஷேக்குக்கு சிகிச்சை அளித்த ஜஹாங்கிர், ரூபி ஹால் ஆகிய மருத்துவமனைகள் மற்றும் அங்கு பணிபுரியும் மருத்துவர் சஞ்சய் அகர்வால் ஆகியோருக்கு எதிராக ரிடா ஷேக்கின் குடும்பத்தினர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ரிடா ஷேக்கின் மரணத்திற்காக ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்கப்போவதாக ரிடா ஷேக் குடும்பத்தின் வழக்கறிஞர் ஆசிப் லம்பவாலா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்