வருணுக்கு கூடுதல் பாதுகாப்பு: அரசு நிராகரிப்பு

செவ்வாய், 7 ஜூலை 2009 (19:41 IST)
தனக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி பாஜக பிலிபிட் மக்களவை உறுப்பினர் வருண் காந்தி விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

மேலும் வருண் காந்தியைக் கொல்லும் திட்டத்துடன் தலைநகர் டெல்லியில் சிலர் கைது செய்யப்பட்டது குறித்த தகவலை உள்துறை அமைச்சகம் முறையாக தெரிவிக்கவில்லை என்று கோரி வருணின் தாயார் மேனகா காந்தி, பிரதமருக்கு எழுதியிருந்த குற்றச்சாற்றையும் அரசு மறுத்துள்ளது.

வருண் காந்திக்கு தற்போது ஒய் பிரிவு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும், (24 மணி நேரமும் 3 சிறப்பு அதிகாரிகளைக் கொண்டது) பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ததன் அடிப்படையில் அது போதுமானது என்று தெரிய வந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோட்டா ஷகீலின் கூட்டாளிகள் புதுடெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வருணைக் கொலை செய்யும் சதித் திட்டத்துடன் வந்திருந்ததை காவல்துறையினர் தெரிவிக்கவில்லை என்றும் கூறி மேனகா காந்தி, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், கைதானவர்கள், டெல்லியில் வழக்கறிஞர் ஒருவரைக் கொலை செய்யும் நோக்கத்துடனேயே வந்திருப்பது தெரியவந்ததாகக் கூறினர்.

எனவே மேனகாவின் குற்றச்சாற்று ஆதாரமற்றது என்று உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி பி.டி.ஐ. செய்தி தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்