பாட்னா: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் லாலு இடம்பெறா விட்டால், அந்தக் கூட்டணியில் இருப்பது பற்றி லோக் ஜனசகதியும் மறுபரிசீலனை செய்யும் என்று அதன் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கூறியிருக்கிறார்.
லாலு பிரசாத் யாதவ் இல்லாவிட்டால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் இல்லை என்று ஹாஜிப்பூரில் அளித்த பேட்டி ஒன்றில் பாஸ்வான் கூறினார்.
லாலு பிரசாத் இல்லாமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் லோக் ஜனசக்தி தொடர்ந்து நீடிக்குமா? என்று கேட்டபோது ராம் விலாஸ் பாஸ்வான் இவ்வாறு பதிலளித்தார்.
தமது சொந்த தொகுதியான ஹாஜிப்பூர் வந்த அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
மூன்றாவது அணியுடன் லோக் ஜனசக்தி கூட்டு சேருமா? என்பதை இப்போதே தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பிரதமர் யார் என்பதை தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்வோம் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் கூறியிருந்த மறுதினம் பாஸ்வான் இதுபோன்ற ஒரு பேட்டியை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
லாலுவின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் மூத்த காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், தேர்தலுக்குப் பின் கூட்டணியில் லாலு நீடிப்பாரா? என்பது கேள்விக்குறியாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
பீகார் மாநிலத்தில் லாலுவின் ஆர்ஜேடியும், பாஸ்வானின் லோக் ஜனசக்தியும் கூட்டணி சேர்ந்து, காங்கிரசை மாநிலத்தில் புறந்தள்ளின. இதையடுத்து காங்கிரஸ் அங்கு தனித்துப் போட்டியிடுகிறது.