பொருளாதார சுணக்கத்திற்கு ஐ.மு.கூ. அரசின் அணுகுமுறை காரணம்: பாரதிய ஜனதா
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (18:50 IST)
நமது நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ‘கனவு பொருளாதாரக் குழு’வின் யதார்த்தத்தை உணராத அணுகுமுறையே காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாற்றியுள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று துவங்கிய பா.ஜ.க.வின் தேச செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், நமது நாட்டின் ஒவ்வொரு துறையின் வாசலையும் பொருளாதார நெருக்கடி தட்டிக் கொண்டிருந்துபோது பிரதமர், நிதியமைச்சர் சிதம்பரம், திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா ஆகியோர் கொண்டக் குழு, தவறான தகவல்களை அளித்து நாட்டை திசை திருப்பிக் கொண்டிருந்தது என்று குற்றம் சாற்றினார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இவர்கள் வரைந்த திட்டங்கள், நமது நாட்டின் யதார்த்தத்துடன் ஒன்றிணையவில்லை என்று கூறிய ராஜ்நாத் சிங், நமது நாட்டின் பொருளாதார அடிப்படைகள் பலமாக உள்ளதென்று இவர்கள் கூறிக்கொண்டிருக்க, தொழில் வளர்ச்சியும், பங்குச் சந்தைகளும், ரூபாயின் மதிப்பும் கடுமையாக சரியத் துவங்கின என்றார்.
இந்தியப் பொருளாதாரத்தின் பலமான அம்சமாகக் கருதப்படும் அன்னியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வரும் அதே நேரத்தில், கோதுமை இறக்குமதி, தேச வேலைக்கு உணவுத் திட்டம், டெல்லி வீட்டு வசதித் திட்டம், சத்யம் என்று மிகப் பெரிய ஊழல்கள் வெளிச்சத்திற்கு வரத் துவங்கியுள்ளன என்று ராஜ்நாத் குற்றம் சாற்றினார்.
நமது நாட்டில் ஏற்பட்டுள்ள தொழில் சுணக்கத்தின் காரணமாக பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதென்றும், தமிழ்நாட்டின் திருப்பூர் ஆயத்த ஆடைத் தொழிலானாலும், குஜராத்தின் சூரத் வைரத் தொழில் ஆனாலும் வேலை இழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று கூறிய ராஜ்நாத், இதற்கு காரணம், மன்மோகன் அரசு கூறுவதுபோல பன்னாட்டு பொருளாதார பின்னடைவு மட்டுமல்ல, ஐ.மு.கூ. அரசின் அடிப்படையிலேயே தவறான பொருளாதார அணுகுமுறைகளே என்று கூறினார்.
ஐ.மு. கூட்டணி அரசின் தவறான பொருளாதார அணுகுமுறையே விலையேற்றத்திற்குக் காரணம் என்று குற்றம்சாற்றிய ராஜ்நாத், கடந்த 4 ஆண்டுக் கால ஆட்சியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தாமையே பொருளாதார சுணக்கத்திற்கும், வேலையின்மைக்கும் வித்திட்டது என்று கூறினார்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேச முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் 4 முதல் 5 விழுக்காடாக இருந்தது, இதனை மன்மோகன் அரசு 9.5 விழுக்காடாக உயர்த்தியது. இதனால் வங்கிகள் அளிக்கும் கடன்களின் மீதான வட்டி 14 விழுக்காடு வரை உயர்ந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பை உணர்ந்து ரொக்க இருப்பு விகிதத்தை மீண்டும் குறைக்க முற்பட்டபோது, எல்லாம் கையை விட்டுப் போய்விட்டது என்று ராஜ்நாத் கூறியுள்ளார்.